search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டாஸ்மாக் கடைகள்"

    டாஸ்மாக் கடைகளில் மதுபானம் விற்பனை செய்யும்போது ரசீது கட்டாயம் வழங்க வேண்டும் என்று டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
    சென்னை:

    டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் ஆர்.கிர்லோஷ்குமார் டாஸ்மாக் மாவட்ட மேலாளர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    டாஸ்மாக் சில்லரை விற்பனை கடைகளில் மதுபானம் அதிகபட்ச சில்லரை விற்பனை விலையை விட கூடுதலாக விற்பனை செய்வதாக புகார்கள் தலைமை அலுவலகத்துக்கு வந்த வண்ணம் உள்ளது. இந்த புகார்களை குறுஞ்செய்தி(எஸ்.எம்.எஸ்.), தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் வழியாக வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

    இது போன்ற குற்ற நடவடிக்கையை தடுக்க பின்வரும் அறிவுரைகள் வழங்கப்படுகின்றன. அதாவது, மதுபான சில்லரை விற்பனை கடைகளில் நடைபெறும் ஒவ்வொரு மதுபான விற்பனைக்கும் ரசீது கண்டிப்பாக வழங்க கடைப்பணியாளர்களை அறிவுறுத்த வேண்டும். அந்த விற்பனை ரசீதில் கடை எண், தேதி, மதுபானத்தின் பெயர், அதன் அளவு, அதன் அதிகபட்ச சில்லரை விற்பனை விலை ஆகியவை குறிப்பிடப்பட வேண்டும். மேலும், கடைப்பணியாளர் ரசீதின் மீது கையொப்பமிட வேண்டும்.

    வணிக வளாகங்கள் உள்பட சென்னையில் உள்ள அனைத்து மதுபான சில்லரை விற்பனை கடைகளிலும் விற்பனை தொகையை டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளில் பெறுவதற்காக ‘ஸ்வைப்’ கருவி வழங்கப்பட்டுள்ளது.

    மதுபான விற்பனையாளர் அல்லது மேற்பார்வையாளர் இவர்களில் யார் ‘ஸ்வைப்’ கருவி மூலம் விற்பனை செய்து ஒப்புகை சீட்டு வழங்குகிறார்களோ, அவர் அந்த ஒப்புகை சீட்டின் பின்புறம், எந்த மதுபானம் விற்பனை செய்ததற்கு அந்த ஒப்புகை சீட்டு கருவியில் இருந்து பெறப்பட்டது என்பதை எழுத வேண்டும். அதாவது மதுபானத்தின் பெயர், அதன் அளவு, அதிகபட்ச சில்லரை விற்பனை விலை, தேதி ஆகிய விவரங்களை கண்டிப்பாக எழுத வேண்டும்.

    ‘ஸ்வைப்’ கருவியில் இருந்து பெறப்பட்ட ஒப்புகை சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள விற்பனை தொகையும், மதுபானத்தின் விற்பனை விலையும் வேறுபட்டு இருந்தால் சம்பந்தப்பட்ட கடைப்பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

    அனைத்து கடைகளிலும் ஒவ்வொரு நாளும் என்னென்ன அளவு கொண்ட மதுபானங்கள் எவ்வளவு விற்பனை செய்யப்பட்டுள்ளது என்று தெளிவாக அதற்குரிய ஏடுகளில் பதிவு செய்ய வேண்டும்.

    மேற்கண்ட அறிவுரைகளை கடைபிடிக்க தவறுபவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
    மே தினத்தையொட்டி வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
    வேலூர்:

    தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் (டாஸ்மாக்) கட்டுப்பாட்டில் இயங்கி வரும் அனைத்து அரசு டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகள், மதுபான கடைகளையொட்டி உள்ள மதுபான பார்கள் மற்றும் நட்சத்திர அந்தஸ்து ஓட்டலில் உள்ள பார்கள் ஆகியவை அனைத்திற்கும் தொழிலாளர் தினமான நாளை (புதன்கிழமை) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, வேலூர்- திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைத்து மதுபான கடைகள், மதுபான பார்கள், நட்சத்திர அந்தஸ்து ஓட்டல்களில் உள்ள பார்கள் அனைத்தும் நாளை மூடப்பட்டு இருக்க வேண்டும். அன்றைய தினத்தில் மதுபானங்களை விற்பனை செய்யக்கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    அன்றைய தினம் மதுபானங்கள் விற்பனை செய்வது தெரியவந்தால், சம்பந்தப்பட்ட டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகளின் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மீது உரிய குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் மதுபான பார்கள், ஓட்டல்களில் உள்ள பார்களில் விற்பனை செய்தால் மதுபான பார் உரிமங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைத்தல், உரிமங்கள் ரத்து செய்தல் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, மதுக்கூட உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு வேலூர், திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரித்துள்ளனர்.
    பாராளுமன்ற, சட்டமன்ற இடைத்தேர்தலையொட்டி திருவாரூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு 4 நாட்கள் விடுமுறை விடப்படும் என கலெக்டர் ஆனந்த் தெரிவித்துள்ளார். #LoksabhaElections2019
    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட கலெக்டர் ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:-

    பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் வருகிற 18-ந் தேதி (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி திருவாரூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக், சில்லறை விற்பனை மதுபான கடைகள் மற்றும் அதனை சார்ந்த மது அருந்தும் கூடங்கள் மற்றும் உரிமம் பெற்ற மது அருந்தும் கூடங்கள் அனைத்துக்கும் வருகிற 16-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி முதல் தேர்தல் நடைபெறும் நாளான 18-ந் தேதி நள்ளிரவு 12 மணி வரையும் மற்றும் வாக்கு எண்ணும் நாளான அடுத்த மாதம் (மே) 23-ந் தேதி ஆகிய 4 நாட்களுக்கு விடுமுறை விடப்பட உள்ளது.

    இந்த நாட்களில் மதுக்கடைகள் மற்றும் மது அருந்தும் கூடங்கள் மூடப்பட வேண்டும். இதில் விதிமீறல்கள் ஏதேனும் கண்டறியப்பட்டால் உரிமத்தினை ரத்து செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  #LoksabhaElections2019
    டாஸ்மாக் மதுக்கடைகளில் பெட்டி பெட்டியாக மதுபாட்டில்களை மொத்தமாக விற்பனை செய்வதற்கும் தேர்தல் கமி‌ஷன் தடை விதித்துள்ளது. #LSPolls
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி பணத்துக்கு அடுத்தப்படியாக அதிக அளவில் புழங்குவது மது பானம்தான்.

    அரசியல் கட்சிகளின் வேலைக்காக வருபவர்களில் பெரும்பாலானவர்கள். மாலை நேரம் ஆகிவிட்டால் மது அருந்துவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

    இதனால் மதுக்கடைகளில் வழக்கத்தைவிட இப்போது மது விற்பனை அதிகமாகி கொண்டு வருகிறது.

    தேர்தல் நடத்தை விதி அமுலுக்கு வந்தபிறகு மதுபான கடைகளையும், மது உற்பத்தி தொழிற்சாலைகளையும், கண்காணிக்கும்படி அதிகாரிகளுக்கு தேர்தல் கமி‌ஷன் உத்தரவிட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் 19 மதுபான தொழிற்சாலைகள் உள்ளன. இங்கிருந்து தினமும் எத்தனை லாரிகளில் மது பாட்டில்கள் வெளியே கொண்டு செல்லப்படுகிறது என்பதை கண்காணிக்க இப்போது ஒவ்வொரு தொழிற்சாலை வாசலிலும் சி.சி.டி.வி. கேமரா நிறுவப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு தொழிற்சாலைகளில் இருந்தும் தினமும் 200 லாரிகளில் டாஸ்மாக் குடோன்களுக்கு மதுபாட்டில்கள் அனுப்பப்படுவது வழக்கம்.

    ஆனால் இப்போது இதைவிட அதிகமான லாரிகளில் மது பாட்டில்கள் அனுப்பப்பட்டால் அதற்கான விளக்கத்தையும், மாவட்ட கலெக்டருக்கு அறிக்கையாக அளிக்க வேண்டும் என்று தேர்தல் கமி‌ஷன் உத்தரவிட்டுள்ளது.

    இதேபோல் டாஸ்மாக் மதுக்கடைகளில் பெட்டி பெட்டியாக மதுபாட்டில்களை மொத்தமாக விற்பனை செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    கடைகளில் வழக்கமாக நடைபெறும் விற்பனையை விட 20 சதவீதத்துக்கு மேல் விற்பனை அதிகரித்தால் அதற்கான காரணத்தையும் கடைகளில் பணியாற்றும் ஊழியர்கள் அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

    இதுபற்றி டாஸ்மாக் உயர் அதிகாரிகளிடம் கேட்டதற்கு அரசுக்கு வருவாய் ஈட்டித்தரும் முக்கிய துறையாக டாஸ்மாக் உள்ளது. மது விற்பனை மூலம் கடந்த ஆண்டு மட்டும் ரூ.26 ஆயிரம் கோடிக்கு மேல் அரசுக்கு வருமானம் வந்துள்ளது.

    இப்போது தேர்தல் நேரம் என்பதால் அனைத்து மதுக்கடைகளிலும் மது விற்பனை அதிகரித்து வருகிறது.

    எனவே இதை கட்டுக்குள் கொண்டு வர மொத்தமாக பெட்டி பெட்டியாக மது விற்க வேண்டாம் என்று அறிவுறுத்தி உள்ளோம்.

    சட்டத்துக்கு புறம்பாக கள்ளத்தனமாக மது விற்பனையில் யாரும் ஈடுபடக்கூடாது என்றும் கூறி உள்ளோம். #LSPolls

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த மூன்று நாட்களில் மட்டும் 330 கோடி ரூபாய்க்கு மது விற்பனை ஆகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. #Diwali #Tasmac
    சென்னை:

    தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்களில் டாஸ்மாக் கடைகளில் குடிபிரியர்களின் கூட்டம் அலைமோதும் என்பதால் அதிக அளவில் விற்பனை செய்வதற்கு இலக்கு நிர்ணயிக்கப்படும். அவ்வகையில் இந்த ஆண்டு டாஸ்மாக் நிர்வாகம் ரூ.350 கோடிக்கு மது விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்ததாக தகவல் வெளியானது.



    அதற்கு ஏற்ப தீபாவளி பண்டிகையையொட்டி 4 நாட்கள் விடுமுறை என்பதால் விற்பனை களைகட்டியது. குறிப்பாக தீபாவளி நாளான நேற்று காலை முதல் இரவு வரை டாஸ்மாக் கடைகள் திருவிழா போன்று காட்சியளித்தது.

    இந்நிலையில், கடந்த மூன்று  நாட்களாக தமிழகத்தில் 330 கோடி ரூபாய்க்கு மது விற்பனை ஆனதாக டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு ரூ.260 கோடிக்கு மது விற்ற நிலையில் இந்த ஆண்டு 70 கோடி ரூபாய் அதிகம் விற்பனை ஆகி உள்ளது. #Diwali #Tasmac
    சென்னை மாவட்டத்தில் காந்தி ஜெயந்தியன்று டாஸ்மாக் கடைகள் அடைக்கப்படும் என்று கலெக்டர் அ.சண்முக சுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. #GandhiJayanti
    சென்னை:

    சென்னை கலெக்டர் அ.சண்முக சுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, அக்டோபர் 2-ந் தேதி சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதைச் சார்ந்த பார்கள், உரிமம் பெற்ற கிளப்புகள், ஓட்டல்களைச் சார்ந்த பார்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட்டு இருக்க வேண்டும். அன்றைய தினத்தில் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது.

    மீறினால், மதுபான விதிமுறைகளின்படி சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  #GandhiJayanti
    தஞ்சை மாவட்டம் திருவோணம் அருகே இன்று காலை டாஸ்மாக் கடைகளை அகற்றக்கோரி 500-க்கும் மேற்பட்டோர் மறியல் செய்ததால் கந்தர்வக்கோட்டை - பட்டுக்கோட்டை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    திருவோணம்:

    தஞ்சை மாவட்டம் திருவோணத்தை அடுத்த ஊரணிபுரத்தில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த ஊரின் அருகே பணிகொண்டான் விடுதி, வெட்டுவா கோட்டை, திருவோணம், கீழ ஊரணிபுரம், மேல ஊரணிபுரம் உள்ளிட்ட இடங்கள் உள்ளன.

    இந்த பகுதியில் கடந்த ஆண்டு 3 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வந்தன. இந்த நிலையில் நெடுஞ்சாலை பகுதியில் செயல்பட்ட டாஸ்மாக் கடைகளை மூட ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து ஊரணிபுரம் பகுதியில் செயல்பட்டு வந்த 3 டாஸ்மாக் கடைகளும் அகற்றப்பட்டன.

    இந்த நிலையில் ஊரணிபுரம் கல்லணை கால்வாய் பகுதியில் புதிதாக 2 டாஸ்மாக் மதுபான கடைகள் அமைக்கப்பட்டு கடந்த 7-ந் தேதி திறக்கப்பட்டன. முன் அறிவிப்பு இல்லாமல் இந்த கடைகள் திறக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    இந்த டாஸ்மாக் மாணவ- மாணவிகள், பெண்களுக்கு இடையூறு ஏற்பட்டு வந்ததால் ஊரணிபுரம் கிராம மக்கள் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் கல்லணை கால்வாய் பெரியாற்று பாலத்தில் திரண்டு வந்தனர்.

    பின்னர் அவர்கள் திடீரென சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 300-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் பள்ளி சீருடையுடன் வந்து மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

    புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூடக்கோரி அவர்கள் கோ‌ஷமிட்டனர். இதில் விவசாய சங்கத்தினரும் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் மாணவர்களுடன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மாணவர்கள், பொதுமக்கள், விவசாயிகள் என 500-க்கும் மேற்பட்டோர் மறியல் செய்ததால் கந்தர்வக்கோட்டை - பட்டுக்கோட்டை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    மறியல் போராட்டம் பற்றி தகவல் கிடைத்ததும் பட்டுக்கோட்டை டி.எஸ்.பி. செங்கமல கண்ணன், தாசில்தார், மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது 2 டாஸ்மாக் கடைகளையும் அகற்றினால்தான் போராட்டத்தை கைவிட்டு செல்வோம் என்று உறுதியாக கூறினர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது.
    அடுத்தடுத்து 2 டாஸ்மாக் கடைகளில் கொள்ளை நடந்த சம்பவம் முத்துப்பேட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த இடும்பாவனம் பகுதி வேதாரண்யம் மெயின் ரோட்டில் வயல்வெளியில் டாஸ்மாக் கடை உள்ளது. போதிய பாதுகாப்பு இல்லாத இந்த டாஸ்மாக் கடையை கடந்த ஜனவரி 6-ந்தேதி மர்ம நபர்கள் உடைத்து திருடி சென்றனர். இந்நிலையில், நேற்று கடையை ஊழியர் திறக்க வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டு 2,600 பிராந்தி பாட்டில், 13 பீர் பாட்டில், ரூ.3700 ரொக்கம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இதன் மொத்த மதிப்பு 2 லட்சத்து 93 ஆயிரமாகும். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜேஷ், சப்-இன்ஸ்பெக்டர் கணபதி தலைமையிலான போலீசார் விசாரணை செய்தனர். இதில் இரவில் வந்த மர்ம நபர்கள் சரக்குகளை லாரியில் திருடிச் சென்றது தெரியவந்தது. மேலும் இதுகுறித்து டாஸ்மாக் கடை சூபர்வைசர் சத்தியமூர்த்தி முத்துப்பேட்டை போலீசில் கொடுத்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் தனிப்படை அமைத்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    முத்துப்பேட்டை வெள்ளகுளம் சுடுகாடு எதிரே டாஸ்மார்க் கடை உள்ளது. இன்று காலை அந்த பகுதியில் சென்ற சிலர் பார்த்தபோது டாஸ்மார்க் கடையின் பூட்டு உடைத்து கிடப்பது தெரியவந்தது. இதுகுறித்து முத்துப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. டி.எஸ்.பி. இனிகோ திவ்யன், இன்ஸ்பெக்டர் ராஜேஷ், சப்-இன்ஸ்பெக்டர் கணபதி ஆகியோர் வந்து விசாரணை நடத்தினர். இதில் கடையில் இருந்த ஆயிரக்கணக்கான மதிப்புள்ள மதுபாட்டில்கள் திருட்டு போய் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து முத்துப்பேட்டை போலீசில் டாஸ்மார்க் சூப்பர்வைசர் உத்தராபதி கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அடுத்தடுத்து 2 டாஸ்மாக் கடைகளில் கொள்ளை நடந்த சம்பவம் முத்துப்பேட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Tamilnews
    ஈரோட்டில் மூடப்பட்ட 19 டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டன.
    ஈரோடு:

    தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுபான கடைகளை மூட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டதை தொடர்ந்து தமிழ்நாட்டில் நூற்றுக்கணக்கான டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. அதன்பின்னர் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளை உள்ளாட்சி சாலைகளாக வகை மாற்றம் செய்யப்பட்ட இடங்களில் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டன.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில், முறையான அறிவிப்பு வெளியிடாமல் மதுபானக்கடைகள் திறக்கப்பட்டு இருந்தால் மூட வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன.

    ஐகோர்ட்டு உத்தரவின்படி ஈரோடு மாவட்டத்தில் 49 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இதனால் 125 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வந்தன. இந்தநிலையில் தமிழ்நாட்டில் ஊரகப்பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை திறக்க சுப்ரீம் கோர்ட்டு அனுமதி வழங்கியது. அதன்பிறகு மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை மீண்டும் திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    ஈரோடு மாநகர் பகுதியில் 19 இடங்களில் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள் நேற்று திறக்கப்பட்டன. அதன்படி, ஈரோடு பிரகாசம் வீதி, ஈரோடு பஸ் நிலையம் அருகில் வீரபத்திரா வீதி, நாராயணவலசு விவேகானந்தர்சாலை, பஸ் நிலையம் அருகில் சேலம் மெயின்ரோடு, ஈரோடு மேட்டூர்ரோடு அபிராமி திரையரங்கம் ரோட்டில் 2 கடைகள், மூலப்பட்டறை வ.உ.சி. பூங்கா எதிரில், திண்டல், சம்பத்நகர், நேதாஜிரோடு, சம்பத்நகர் அண்ணா திரையரங்கம் ரோடு, ஈரோடு பெருந்துறை ரோடு, பவானி ரோடு, வீரப்பம்பாளையம், ஈரோடு பஸ் நிலையம், அகில்மேடு வீதி, சூளை சத்திரோடு, மரப்பாலம் நேதாஜி ரோடு, வில்லரசம்பட்டி நசியனூர் ரோடு ஆகிய இடங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு நேற்று முதல் செயல்பட்டு வருகின்றன. 
    1,300 டாஸ்மாக் கடைகளை மூடும் ஐகோர்ட்டு உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு தெரிவித்துள்ளது. #tasmacshop #highcourt #SC
    புதுடெல்லி:

    சென்னை ஐகோர்ட்டில், வழக்கறிஞர்களுக்கான சமூகநீதிப்பேரவையின் தலைவர் கே.பாலு கடந்த மாதம் ஒரு வழக்கை தாக்கல் செய்தார். அதில், அவர் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் மொத்தம் 6 ஆயிரத்து 815 டாஸ்மாக் மதுபானக்கடைகள் ஏற்கெனவே இருந்தது. கடந்தாண்டு இறுதியில் சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவுக்குப்பிறகு தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருந்த பெரும்பாலான கடைகள் மூடப்பட்டன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டன.

    இதையடுத்து சாலைகளை வகை மாற்றம் செய்து புதிதாக மதுபானக் கடைகளை திறக்க தமிழக அரசு முயற்சித்தபோது, அதற்கு இந்த ஐகோர்ட்டு தடை விதித்தது.

    இந்த ஐகோர்ட்டில் சாலைகளை வகை மாற்றம் செய்யமாட்டோம் என்று தமிழக அரசும் உத்தரவாதம் அளித்தது. ஆனால் கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் 1-ந்தேதி மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை ஆணையர், உள்ளாட்சி சாலைகளில் டாஸ்மாக் மதுபானக் கடைகளை உடனடியாக திறக்கும்படி அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை சுப்ரீம் கோர்ட்டு மற்றும் ஐகோர்ட்டு உத்தரவுகளுக்கு எதிராக உள்ளது. எனவே சாலைகளை வகைமாற்றம் செய்து, மதுபானக்கடைகள் திறக்க தடை விதிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

    இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர் கடந்த ஏப்ரல் 28-ந்தேதி பிறப்பித்த உத்தரவில், ‘தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை உள்ளாட்சி சாலைகளாக வகைமாற்றம் செய்து, அதுகுறித்து முறையான அறிவிப்பு வெளியிடாமல், அந்த சாலைகளில் டாஸ்மாக் மதுபானக்கடைகள் திறக்கப்பட்டு இருந்தால், அப்படிப்பட்ட கடைகளை உடனடியாக மூட வேண்டும்.

    அதுபோல வகை மாற்றம் செய்யாமல் இனி புதிதாக டாஸ்மாக் கடைகளைத் திறக்க தடை விதிக்கப்படுகிறது. நட்சத்திர ஓட்டல்களில் உள்ள மதுபான விடுதிகளுக்கு எந்த தடையும் இல்லை’ என்று கூறியுள்ளனர்.



    இந்த உத்தரவினால், தமிழகம் முழுவதும் சுமார் 1,300 டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, ஐகோர்ட்டின் இந்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது.

    இந்த மேல்முறையீட்டு வழக்கு, சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தீபக் மிஷ்ரா, நீதிபதிகள் கன்வில் கர், சந்திரசூட் ஆகியோர் கொண்ட முதன்மை பெஞ்சில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஐகோர்ட்டு உத்தரவுக்கு தடை விதிக்க நீதிபதிகள் மறுத்தனர்.

    மேலும், நெடுஞ்சாலைகளில் உள்ள மதுபானக் கடைகளை அகற்றுவது தொடர்பான சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவானது இல்லை. அந்தந்த மாநிலத்தில் உள்ள சூழ்நிலைக்கு ஏற்ப மாறுபடும். தமிழகத்தை பொருந்தவரை, அரசே மதுபானக் கடையை நடத்துகிறது.

    ஐகோர்ட்டு உத்தரவினால் 1,300 மதுபானக்கடைகளை மூட வேண்டியதுள்ளதாக அரசு தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால், ஐகோர்ட்டு உத்தரவில் நாங்கள் தலையிட விரும்பவில்லை’ என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

    ‘அதேநேரம், தமிழக அரசின் கோரிக்கையை மீண்டும் பரிசீலிக்க ஐகோர்ட்டுக்கு உத்தரவிடுகிறோம். தமிழக அரசு 1,300 கடைகளின் விவரம், அந்த கடை உள்ள பகுதிகளின் விபரம் உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் ஐகோர்ட்டில் அறிக்கையாக தாக்கல் செய்யவேண்டும்.

    அந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நாளில் இருந்து ஒரு மாதத்துக்குள், ஐகோர்ட்டு அதை பரிசீலித்து, தகுந்த உத்தரவினை பிறப்பிக்க வேண்டும். அந்த உத்தரவை வருகிற மே 31-ந்தேதிக்குள் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தனர். #tasmacshop #highcourt #SC
    ×